Friday, July 15, 2011

வாழ்க திருவிதாங்கூர் மகாராஜாக்கள்!
திருவிதாங்கூர் மகாராஜாக்களின் எளிமையும் பக்தியும் தற்போது எல்லாம் வல்ல கடவுள் ஸ்ரீ பத்மநாபசுவாமி அருளால் வெளி உலகிற்கு தெரிய வந்து உள்ளது.நான் வசிக்கும் செங்கோட்டை 1956 நவம்பர் 1 க்கு முன்னால் திருவிதாங்கூர் கொச்சி சமஸ்தானத்தில் இணைந்து இருந்தது.1947 இந்திய சுதந்திரம் மொழி வாரி மாநிலங்கள் அமைத்தால்தான் மக்களுக்கு நல்லது என்று எண்ணி 1956 நவம்பர் 1 முதல் மொழிவாரி மாநிலங்கள் அப்போதைய மத்திய அரசால் கொண்டு வரப்பட்டன.1956 நவம்பர் 1 இப்போதும் என் மனதில் நிலை கொண்டு உள்ளது.அப்போது எனக்கு ஒன்பது வயது.அந்த நாளில் எனது தந்தையார் எஸ்.ஹெச்.கல்யாணசுந்தரம்,M A B L , மதராஸ் மாகாணத்தில்
இணைந்த செங்கோட்டை தாலுக்காவின் முதல் தாசில்தார் மற்றும் திருவிதாங்கூர் கொச்சியில் இருந்து பிரிந்த செங்கோட்டை தாலுக்காவின்கடைசி தாசில்தார் என்ற பெருமையை பெற்றார்.அன்று செங்கோட்டை
மக்கள் மிக்க மகிழ்வோடு தாய்மொழி தமிழ் கொண்டாடப்படும் மதராஸ்
மாகாணத்தில் இணைந்ததை வியந்து அரசாங்கத்தால் நடத்தப்பட்ட
விழாக்களில் கலந்து கொண்டனர்.செங்கோட்டையில் அந்த நாட்களில்
மழை இல்லாத கோடையில் திடீர் என சில நிமிடங்கள் குளிர்ந்த நல்ல மழை
பெய்தால் மகாராஜா செங்கோட்டை அருகில் உள்ள குற்றாலத்திற்கு வந்து
உள்ளார் என்று செங்கோட்டை மக்கள் பேசிக்கொள்வார்கள்.
இது செங்கோட்டை மதராஸ் மாகாணத்தில்இணைந்த பிறகு கொஞ்ச
வருஷங்கள் தொடர்ந்து பிறகு நின்றே போனது.
காரணம் - பிறகு மகாராஜா இந்த பக்கம் வரவே இல்லை.குற்றாலம் பராசக்தி காலேஜ் திருவிதாங்கூர் மகாராஜாவிற்கு சொந்தமான இடத்தில்தான் இருக்கிறது.இந்த காலேஜ் கட்ட மகாராஜா பல ஏக்கர் நிலங்களை இலவசமாக மதராஸ் மாகாண அரசின் இந்து சமய அறநிலைய துறைக்கு வழங்கினார்.நான் 1961 முதல் 1963 வரை நாகர்கோயில் எஸ் எல் பி ஹைஸ்கூலில் படித்தேன்.இதுவும் திருவிதாங்கூர் மகாராஜாவால் சேது லக்ஷ்மி பாய் என்ற மகாராணியின் பெயரால் கட்டப்பட்டது.வானோக்கிய கட்டிடங்கள், பரந்த வகுப்பு அறைகள்,பிரமாண்டமான விளையாட்டு திடல்கள் என்று பெரிய
கல்லூரி போல தோற்றம் அளிப்பது எஸ்எல்பி பள்ளி.இந்த ஆண்டு
பிப்ரவரியில் நாகர்கோயில் சென்றபோது எஸ் எல் பி பள்ளிக்கு சென்று பழைய நினைவுகளுடனும் சந்தோஷத்துடனும் சுற்றி பார்த்தேன்.ஹெட் மாஸ்டர் திரு.சத்தியகுமார் மகிழ்வோடு என்னுடன் பேசினார்.எனது பழைய சார்கள் போனிபாஸ், சதாசிவன் பிள்ளை,மாணிக்கம்,லாரன்ஸ்,வில்சன்,
ஜென்னி மேடம்,வீரபாகு,முத்து பெத்தனார், தங்கம்மை மேடம்,கோலம்மை டீச்சர்,அம்ருதாபாய் டீச்சர் பற்றி விசாரித்தேன்.பலர் இன்று இப்பூவுலகில் இல்லை என்ற செய்தி கிட்டியது.திருவிதாங்கூர் மகாராஜா இந்த பள்ளியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார் என்று கூறி அந்த விழா மலரையும் என்னிடம் ஹெட் மாஸ்டர் தந்தார்.பள்ளி மாணவர்களிடம் பேசி போட்டாக்கள் எடுத்தேன்.அந்த நொடி மகிழ்ச்சிக்கு ஈடாக எதை சொல்ல?மகாராஜா என் மனதில் மேலும் உயர்ந்த ஸ்தானத்திற்கு சென்றார்.
எனது தந்தை கூறிய திருவிதாங்கூர் மகாராஜா பற்றிய செய்திகளும் நான் தரிசித்த ஸ்ரீ அனந்தபத்மனாபசுவாமி கோயிலும் என் மனதில் விதைத்த நல்ல எண்ணங்கள் பல கோடி ரூபாய்க்கு சமம்.மேலும் தற்போதைய கேரளா
மகரிஷி பரசுராமரால் ஸ்தாபிக்கப்பட்டது.பல நூற்றாண்டு காலங்கள் இறைவனின் பொக்கிஷங்களை பாதுகாத்து இன்றும் மிக எளிமையுடன் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ள உத்திராடம் திருநாள் மகாராஜா போன்றவர்களை பார்க்கும்போது மனம் ஏன் இவர்களைப்போல்
இந்நாளைய அரசியல்வாதிகளும்,அரசு அமைச்சர்களும் இல்லை என்ற ஏக்கத்தோடு வினா எழுப்புகிறது.