நாரதரும் கிருஷ்ணனும் நல்ல நண்பர்கள் அல்லவா? அடிக்கடி நாரதர் துவாரகைக்கு வருவார் கிருஷ்ணனைக் காண. கிருஷ்ணனுக்கும் நாரதரோடு அளவளாவ ரொம்ப பிடிக்கும். அவனுடைய பக்தர்களில் அவர் சிறந்தவர் அல்லவா.? ஒரு நாள் நாரதர் கிருஷ்ணன் அரண்மனைக்கு வந்தார். வாசலில் வாயிலில் புதிதாக ஒரு காவலன் இருந்தான். அவனுக்கு நாரதரை தெரியாது. உள்ளே போக முயற்சித்த நாரதரை தடுத்தான்
“முனிவரே யார் நீங்கள்?”
“என்னை தெரியாதா உனக்கு?
“தெரியாது அய்யா”
“நான் நாரதன்”
“சரி. உள்ளே போக முடியாது”.
நீ புதியவன் போல இருக்கிறது. என்னை யாரும் தடுப்பதில்லை. நான் கிருஷ்ணனின் அந்தப்புரம் வரை போக அனுமதிக்கப்பட்டவன்”
“சுவாமி, எனக்கு அதெல்லாம் தெரியாது. எஜமான் யாரையும் உள்ளே விடாதே” என்று கட்டளையிட்டு இருக்கிறார். நான் என் வேலையை செய்ய விடுங்கள்”.
“நாரதன் வந்திருக்கிறேன் என்று போய் சொல் அவரே வந்து என்னை அழைத்து போவார்.”
“சுவாமி நாரதர் என்ற பெயர் எனக்கு நன்றாக தெரியும் எனக்கு உங்கள் மீது மரியாதை
உண்டு நீங்கள் சொல்வதை நான் நம்புகிறேன் ஆனால் இன்றுஎனக்கு என்ன கட்டளை என்றால் "எஜமான் பிரார்த்தனை செய்கிறார் அந்த நேரத்தில் யாராயிருந்தாலும் உள்ளே விடாதே என்று சொல்லிவிட்டு
போயிருக்கிறார். பிரார்த்தனை முடிந்து அவரே வந்து சொல்லுவார். பிறகு நீங்கள் உள்ளே
போகலாம்” நாரதருக்கு ஆச்சர்யம் .” என்ன, கிருஷ்ணனே பிரார்த்தனை செய்கிறானா??
யாரிடம்? மூவுலகுமே அவனை பிரார்த்திக்கும்போது அவன் யாரை பிரார்த்திக்கிறான்?. புரியவில்லையே. ஏதோ புதிராக இருக்கிறதே!!~”. நாரதருக்கு அந்த காவலாளி மேல் கோபம் வந்தது.
“தம்பி, நீ சொல்வது பிசகு. உன் எஜமானனை தாழ்த்தி சொல்லி விட்டாய். அவருக்கு தெரிந்தால் இது உனக்கு நல்லதில்லை. அவர் கடவுள். அவரை எல்லாரும் வணங்கி பிரார்த்திக்கும்போது
அவரே யாரிடமோ பிரார்த்தனை செய்கிறார் என்பது ரொம்ப தப்பு.”
“முனிவரே, என்னை மன்னித்துவிடுங்கள். நான் கூட்டியோ குறைத்தோ சொல்லவில்லை.
எஜமான் என்னிடம் என்ன சொன்னாரோ அதைத்தான் சொன்னேன். தவறு செய்யவில்லை”.
நாரதர் பேசாமல் நின்றார். நேரம் ஓடியது. ஏறக்குறைய அரை மணி நேரம் சிலையாக நின்ற நாரதரிடம்
கிருஷ்ணனே வந்தான்.
“வாருங்கள் நாரதரே, வெகுநேரமாக காத்திருக்கிறீர்களோ?” என்றான் கிருஷ்ணன்.
“பரவாயில்லை. காத்திருக்க வேண்டியவன் காத்திருந்தேன்”. என்று பட்டென்று நாரதர் சொன்னார்.
“முனிஸ்ரேஷ்டரே!, இன்று உங்கள் முகம் வழக்கம்போல் பிரசன்னமாக இல்லையே.ஏதோ உள்ளே
சில எண்ணங்கள் உங்களை வாட்டுவது போல் அல்லவோ எனக்கு தோன்றுகிறது!”
“வழக்கம் போல் நான் இல்லை என்பது வாஸ்தவமே. இன்று தான் முதல் முதலாக உங்கள் காவலாளி என்னை இதுவரை தடுத்து நிறுத்தி உள்ளே அனுமதிக்கவில்லை.”
"ஆமாம்"
“கிருஷ்ணா, நீ பிரார்த்தனையா செய்து கொண்டிருந்தாய். இந்த நேரத்தில் யாரையும் உள்ளே
விடாதே என்றாயாம். முன்னுக்கு பின் முரணாக இருக்கிறதே?”.
“ஆமாம் அவன் சொன்னது சரியே.!”
“என்னால் என் காதுகளையே நம்ப முடியவில்லையே நீயா சொல்கிறாய் பிரார்த்தனை பண்ணிக் கொண்டிருந்தேன்” என்று??”.
“ஆமாம்! நாரதா.”
“யாரை பிரார்த்தனை செய்ய வேண்டும்? அதுவும் நீ!!”
“என்ன நாரதா உனக்கு சந்தேகம், சரி, வா உள்ளே. நான் யாரை ப்ரார்த்திகொண்டிருந்தேன் என்று நீயே பாரேன். இது தான் என் தெய்வம். !!”
நாரதர் என்ன பார்த்தார்?
குட்டி குட்டியாக நிறைய நாரதர், அர்ஜுனன், ராதை, கோபியர், எண்ணற்ற கோடானு கோடி மனிதர்கள்,ரிஷிகள், பசுக்கள், கோபர், கண் கொள்ள வில்லை அவற்றை பார்த்து புரிந்துகொள்ள!!”
“இவர்களா உன் தெய்வம் கிருஷ்ணா?”
“ஆம். நாரதா. எண்ணற்ற உயிர்களை நான் படைத்து காத்தேன். ஒவ்வொரு முறை நான் அவதரிக்கும்
போதும் அந்த அந்த அவதாரத்தில் என் மீது பிரேமை, பரிபூர்ண பக்தி வைத்து என்னை
பூஜிக்கும், பிரார்த்திக்கும்,அவர்களை,அவர்களின் ப்ரேமையை, பக்தியை, பரிபூர்ண அன்பை நான் பூஜிக்க, பிரார்த்திக்க வேண்டாமா??. இவர்களை தவிர நான் யாரை பூஜிக்க, பிரார்த்திக்க முடியும்?
கிருஷ்ணனின் உள்ளத்தை, உண்மையான மனதை, உயிர்கள் மேல் உள்ள பாசத்தை பரிவை புரிந்து கொண்ட நாரதன் தன் அவசர புத்தியை நினைத்து வருந்தினான்..
No comments:
Post a Comment